நீண்ட ஐரோப்பியப் பயணம் – 3

பார்சிலோனாவில் இருந்து ஜெனீவாவுக்கு விமானம். விமான நிலையத்தில் இருந்து ஒரு ரயில் பிடித்து ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து வெகுதூரம் நடந்து ஹாஸ்டல் வந்து சேர்ந்தேன். ரயில் நிலையத்தின் பின்புறம் இறங்கி வெளியே வந்தால் ஸ்விட்சர்லாந்தில் இருப்பது போலவே இல்லை. ஐரோப்பாவின் இரண்டாம் தர சிறிய ஊரில் உள்ளது போல் இருந்தது. ஸ்விட்சர்லாந்து என்றால் நம் நினைவில் வருவது சுத்தமான சாலைகளும், பச்சைப் புல்வெளிகளும், மலைகளும், பனியுமே. அந்த இடம் அப்படி இல்லை. கொஞ்ச தூரம் நடக்க ஆரம்பித்ததுமே பசுமையினைக் காண முடிந்தது. ஆள் அரவமில்லாத அகன்ற சாலைகள். ஜெனிவா என்பது சுற்றுலாத்தளம் அல்ல. சுற்றுலா வருபவர்கள் பெரும்பாலும் ஜெனீவாவைத் தவிர்த்து விடுவார்கள். ஆனால் நமக்குத் தெரிந்த பெயர் அதுதான். அதை ஒரு எட்டு பார்த்து விடலாம். அதனால் ஓரிரவு மட்டும்தான் இங்கு. மறுநாள் இங்கிருந்து கிளம்பி விடுவதுதான் திட்டம். ரயிலுக்கு எந்த முன்பதிவும் செய்யவில்லை. ஸ்விட்சர்லாந்தில் ரயிலுக்கு முன் பதிவு தேவை இல்லை. பயணத்திற்கு முன் நாம் நிலையத்தில் பயணச்சீட்டு எடுத்து ரயிலில் தவ்விக்கொள்ளலாம். அதனால் பயணம் Flexible தான். ஆனால் உத்தேசமாக ஹாஸ்டெல்களில் முன்பே படுக்கைப் பதிவு செய்திருந்தேன். இல்லையேல் கடைசி நேரம் பதிவு செய்தால் விலை அதிகரிக்கும். ஸ்விசர்லாந்து உலகின் எக்ஸ்பென்சிவ்வான நாடுகளில் ஒன்று. நான் முன்பதிவு செய்திருந்த ஹாஸ்டல் ஒரு டூரிஸ்ட்களுக்கான ஹாஸ்டல். நல்ல வசதியானது. இது போன்ற ஹாஸ்டெல்கள் வசதியான நிறைய அறைகளுடனும், உள்ளேயே உணவகம், பார், பப் வசதிகளுடன் இருக்கும். இங்கு சமையலறை இருக்காது. சாதாரண ஹாஸ்டெல்களை விட கொஞ்சம் விலை கூடுதலாக இருக்கும். மற்றவகை ஹாஸ்டெல்கள் சாதாரணமானவை. இங்கு சமையலறையும் இருக்கும். நாம் சமைத்து சாப்பிட்டுக்கொள்ளலாம். வெகுநாட்கள் தங்கி இருப்பவர்கள் இது போன்ற ஹாஸ்டெல்களைத் தேர்ந்தெடுப்பார்கள். நான் பதிவு செய்திருந்தது ஆறு படுக்கைகள் கொண்ட அறையில் ஒரு படுக்கை. அந்த அறை நல்ல பெரிதாக வசதியாக உயர்தர ஹோட்டல் அறையைப் போல் இருந்தது. ஏற்கனவே மாலையாகி விட்டிருந்தது. காலையும் சரியாக சாப்பிடவில்லை, மதியமும் சாப்பிடவில்லை. ஏதேனும் இந்திய உணவகம் இருந்தால் சாப்பிடலாம் என்று நினைத்தேன்.

இந்தியர்கள் மத்தியில் ஸ்விட்சர்லாந்து மிகப் பிரசித்தம். அதிலும் வட இந்தியர்கள் மத்தியில். இயக்குனரும் தயாரிப்பாளருமான யாஷ் சோப்ரா அதற்கு முக்கிய காரணம். அவர் எடுத்த பல படங்கள் ‘Dilwale dulhaniya le jayenge’ உட்பட ஸ்விட்சர்லாந்தின் பின்னணியில் எடுக்கப்பட்டன. Dilwaleவை போலவே படம் எடுக்கிறேன் என்று கிளம்பியவர்களும் அதே போல் ஸ்விசை மையமாக வைத்துப் படமும் அதன் பின்னணியில் பாடல்களும் எடுத்தார்கள். இன்னும் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஸ்விட்சர்லாந்து அரசாங்கம் சார்பாக Interlaken என்ற ஊரில் யாஷ் சோப்ராவின் சிலையும் வைத்திருக்கிறார்கள். அநேக இந்தியர்களை ஸ்விட்சர்லாந்தில் பார்க்கலாம். எனது ஹாஸ்டெலில் இருந்து அரை மணிநேரம் நடந்தால் ஐக்கிய நாடுகள் தலைமையகம் இருந்தது. அதைப் போய்ப் பார்த்து விடலாம். வானம் வேறு இருட்டிக்கொண்டு வந்தது. மழை பெய்யும் போல் தெரிந்தது. குடையை எடுத்துக்கொண்டேன். அங்கு சென்று வெளியில் நின்று சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். சுத்தமான அழகான தெருக்கள். வழியில் ஆள் நடமாட்டமே இல்லை. எப்பவும் இப்படித்தானா அல்லது இன்று தான் இப்படியா? இரவுணவுக்கு ஹாஸ்டல் அருகேத் தேடிப்பார்த்ததில் ஒரு இந்திய உணவகம் இருந்தது. ஆனால் விலை எக்குத்தப்பாக இருந்தது. டிராம் பிடித்து மீண்டும் ரயில் நிலையம் சென்று முன் வாயிளுக்கு வெளியே சென்றால் வெளியே ஏகப்பட்ட உணவகங்கள் இருந்தன. அங்கு கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு இரவுணவை முடித்துக்கொண்டு திரும்பினேன். மறுநாள் அதிகாலையே எழுந்து ஊர் சுற்றக் கிளம்பிவிட்டேன். மதியம் Lucern செல்வதுத் திட்டம். காலை டிராம் ட்ராமாகத் தவ்வி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தேன். நல்ல குளிர். ஆள் அரவம் இல்லை. ஜெனீவா ஓர் நகரம் போல் இல்லாமல் ஒரு பெரிய டவுன் போலவே இருந்தது. காலை எல்லோரும் வேலைக்குக் கிளம்பி சென்று கொண்டிருந்தார்கள். நான் வேலை இல்லாமல் இப்படி சுற்றிக் கொண்டிருப்பது சிறிய குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. உலகில் எல்லோரும் ஏதோ ஒரு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அல்லது தேடிக்கொண்டிருக்கிறார்கள் இல்லையா? எதற்காக? பணத்திற்காக? சமூகத்தில் ஒரு இடத்திற்காக? ஒருவன் யார் என்பதை அவனது வேலை தான் முடிவு செய்கிறது இல்லையா? யார் நீ என்பதற்கு நான் இன்ஜினீயர்,டாக்டர், வங்கி ஊழியன், வாட்ச்மேன் என்று தானே சொல்ல முடியும். ஒன்பது மணி முதல் ஆறு மணி வரைதான் நீ இன்ஜினீயர் என்று சொல்ல முடியாது. என்ன வேலை செய்கிறாயோ அது தான் நீ. உனது எல்லா முடிவையும் அது தான் தீர்மானிக்கிறது. நீ எந்த நேரத்தில் காலை எழ வேண்டும், எப்போது தூங்கப் போகவேண்டும், எந்த வீட்டிற்கு குடி போக வேண்டும் , யாரைத் திருமணம் செய்ய வேண்டும், எத்தனைக் குழந்தைப் பெற வேண்டும், உனக்கு யார் நண்பர்களாக இருக்க வேண்டும்,உனக்கு என்ன மாதிரி நோய் வரவேண்டும் என்று எல்லாவற்றையுமே உனது வேலை தான் தீர்மானிக்கிறது இல்லையா. உதாரணமாக காலை ஒன்பது மணிவரை நான் தூங்க வேண்டும் என்று நினைத்தால் முடியுமா? ஒன்பது மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டும் அப்படியெனில் ஏழு மணிக்காவது நீ கட்டாயம் எழுந்திருக்க வேண்டும், உன் வேலை உன் சம்பளத்தைப் பொறுத்து தான் உனக்குப் பெண் தருவார்கள், அதைப் பொறுத்து தான் நீ எத்தனைக் குழந்தை என்று முடிவெடுப்பாய் . உண்மையில் முதல் இருபத்தி இரண்டு வருடங்களையும் பள்ளி, கல்லூரி என்று செலவிடுவது ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்வதற்குத் தானே அன்றி எதையும் தெரிந்து கொள்வதற்கு அல்லவே. இப்படி சிந்தனை மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

பதினோரு மணிவாக்கில் அறைக்குச் சென்றுவிட்டேன். பின் கிளம்பி மதியம் ரயிலைப் பிடிக்க வேண்டும். எனது அறையில் இந்தியன் ஒருவன் தங்கியிருந்தான். குஜராத்தைச் சேர்ந்தவன். முப்பது வயது இருக்கும். Bsc தான் முடித்திருக்கிறான். வைட்டமின் மாத்திரை,எனர்ஜி ட்ரின்க் போன்ற மருத்துவ சம்பந்தமான பொருட்களைச் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கிறானாம். அது அவனது சொந்தகாரர்களின் நிறுவனம்தானாம் . இங்கு அது சம்பந்தமாக மூன்று நாள் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் தனது நிறுவனத்தின் பொருட்களை பிற நாட்டிலிருந்து வேறு நிறுவனத்தின் சார்பாக வரும் ஆட்களிடம் காட்டுவதற்கு எடுத்து வந்திருக்கிறான். இது தான் அவனது முதல் வெளிநாட்டுப் பயணம். நிகழ்ச்சி நேற்றோடு முடிந்தது. எந்த கூச்சமோ தயக்கமோ இல்லாமல் எல்லாரிடமும் பேசிக்கொண்டிருந்தான். இங்கே இருந்த நாட்களில் தெரிந்த சிலரைப் பிடித்து ஊரைச் சுற்றி வந்து விட்டான். அவனுக்கு இந்தியாவிற்கு திரும்பச் செல்ல மூன்று நாட்கள் இருந்தது.ஜெனீவாவில் இருந்து விமானம் . அதனால் இன்று கிளம்பி ஷேர் டாக்ஸியில் பாரிஸ் சென்று இரண்டு நாள் தங்கித் திரும்பிவர முன்னேற்பாடு செய்திருந்தான். ஆனால் அவன் நண்பன் பாரிஸ்க்கு வர முடியாது ரயில்கள் ஓடவில்லை என்று சொல்லி விட்டானாம். அவனுக்கும் பாரிஸ் செல்ல விருப்பம் இல்லை என்று தான் தெரிந்தது. அறையில் இருந்த மற்றவர்களிடம் பேசி இருக்கிறான். அவர்களின் எந்தத் திட்டமும் இவனுக்கு ஒத்து வரவில்லை. நான் அன்று கிளம்பி Lucern செல்வதை அறிந்ததும் தானும் கூட சேர்ந்து கொள்வதாகச் சொன்னான். ஆளைப் பார்த்தால் சேர்த்துக்கொள்ளலாம் என்று தான் தோன்றியது. ஆனால் நம்ம கிறுக்குத்தனத்திற்கு அவனால் ஈடு கொடுக்கமுடியுமா? அவனிடம் சொல்லிவிட்டேன். ‘பொதுவாக நான் யாரையும் பயணத்தின் போது சேர்த்துக்கொள்வது இல்லை. ஏனெனில் என்னிடம் ஒரு திட்டம் இருக்கும். இது போன்ற திடீர் சேர்க்கை அல்லது மாற்றம் அதில் குழப்பத்தை விளைவிக்கும். இருந்தாலும் உன்னை சேர்த்துக்கொள்கிறேன். ஆனால் ஏதேனும் பிரச்சனை என்றால் நான் என் வழியில் போய்க்கொண்டே இருப்பேன்’ என்று மறைமுகமாகக் கூறிவிட்டேன். அவனும் ஒத்துக்கொண்டான். நானும் அவனும் சேர்ந்து Lucern செல்வது முடிவானது. Lucernஇல் நான் முன்பதிவு செய்த ஹாஸ்டெலிலேயே அவனும் பதிவு செய்து கொண்டான். ரயிலில் Lucern பயணம்.

Lucernஇல் அப்போது தான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. எங்களது ஹாஸ்டல் ஊரின் மையப்பகுதியில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. பக்கத்தில் ஒரு கடையும் இல்லை. ஹாஸ்டெலில் பையை வைத்துவிட்டு மீண்டும் கிளம்பி ரயில் நிலையம் இருந்த மையப்பகுதிக்குச் சென்று விட்டோம். ஸ்விட்சர்லாந்தில் அப்போது சீசன் கிடையாது. அதனால் குறைவான சுற்றுலாப் பயணிகளையே பார்க்க முடிந்தது. ரயில் நிலையம் பக்கத்தில் இருந்த அந்த ஏரியையும் அதை கடந்து போகப் போடப்பட்டிருந்த மரத்தாலான பாலத்தையும் சுற்றி நடந்து கொண்டிருந்தோம். அங்கே ஒரு இளம்பெண் வயலின் வாசித்து காசு பெற்றுக்கொண்டிருந்தாள். அவன் அந்தப் பெண்ணையே வளைத்து வளைத்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான். இந்தியர்களுக்கு அந்தப் பெண் ஒரு இரக்கத்தை உண்டாக்குவாள். ஏன் இப்படி காசு வாங்கணும் என்று. நாம் அதை பிச்சையோடு ஒப்பிட்டுக்கொள்வோம். ஆனால் அது பிச்சை இல்லை. நான் என் திறமையை பொது மக்கள் முன்னிலையில் வைக்கிறேன். பிடித்திருந்தால் வெகுமதி தாருங்கள் என்பதே. அவனிடம் இவ்வளவு நேரம் வீடியோ எடுத்ததற்கு ஏதாவது காசு போட்டுவிட்டு வா என்று நான் சொன்ன பிறகு போட்டுவிட்டு வந்தான். அந்தப் பாலத்தை சுற்றி நிறைய பேங்க்குகள் இருந்தன. சிறு வயதில் சுவிஸ் பேங்க் என்பது பெரிய யாருமே உள்ளே நுழைய முடியாத செக்கிரிட்டியுடன் இருக்கும் என்று நினைத்திருந்தேன். இதுவும் நம்மூர் பேங்க் போல் தான் இருக்கிறது. அதே போல் ஒரு காலத்தில் சுவிஸ் பேங்க் உலகெங்கும் உள்ள கருப்புப் பணத்தை ஒளித்து வைத்துக் கொள்ளப் பயன்பட்டது. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளரின் விவரத்தை எக்காரணத்திற்கும் வெளியே சொல்லக்கூடாது என்ற அரசாங்கத்தின் கடுமையான சட்ட விதிகளால். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஸ்விட்சர்லாந்தின் வளர்ச்சிக்கு இந்த வங்கிகள் ஒரு முக்கியமான காரணம். இரண்டாம் உலகப்போரில் ஸ்விட்சர்லாந்து எந்த அணியையும் ஆதரிக்காமல் நடுநிலை வகித்தது. அதனால் அப்போது ஜெர்மானியர்கள் கொள்ளையடித்த செல்வத்தையும் யூதர்கள் அவர்கள் செல்வத்தையும் சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்தார்கள். பின் இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மனியின் தோல்வி மற்றும் யூதர்களின் Holocaust காரணமாக அந்த செல்வங்கள் அங்கேயே தங்கி விட்டன என்று கூறுவார்கள். நாங்கள் அன்று அங்கு சுற்றி இருந்த இடங்களை அளந்து விட்டு நான் மட்டும் இரவுணவை முடித்துவிட்டு வந்துவிட்டோம். அவன் சுவிஸ்ஸில் இருக்கிற நாட்களுக்கு பேக்கஜ்ட் உணவை கொண்டு வந்திருந்தான். பாதி வேகவைத்த சோறும், Dalழும் பேக்கிங் செய்யப்பட்டு. இது போன்ற பேக்கஜ்ட் செய்யப்பட்ட உணவை நான் வேறு எங்கும் இந்தியாவில் கடைகளில்ப் பார்த்ததில்லை. குஜராத்தில் கிடைக்கும் என்றான். சுவையும் நன்றாகவே இருந்தது.

மறுநாள் இரண்டு ரயில் ஏறி Mount Tiltils சென்றோம். அந்த ரயில் நிலையம் சென்று சேரும் போது விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. திறந்து கிடைக்கும் ரயில் நிலையத்தில் ஆளே இல்லை. பச்சைப் புல்களால் ஆன வெட்ட வெளி சுற்றி மலை இதமான தூறல்.ஆஹா இது தான் ஸ்விட்சர்லாந்து. ஆனால் பனி மூட்டமாக இருந்தது. மலை மேல் இன்னும் மோசமாக இருக்கும். Mount tiltisக்கு செல்ல இரண்டு ரோப்காரில் செல்ல வேண்டும். மேல் தளத்தில் நல்ல குளிர். மேலே வெளியே எங்கும் பனி விழுந்து கிடந்தது. பனிபோல் மழை பெய்து கொண்டிருந்தது. அது மட்டும் இல்லாமல் பனிமூட்டத்தால் கொஞ்சம் உள்ளே சென்றால் எதுவும் தெரியவில்லை. இருந்தாலும் எல்லோரும் நடந்து கொண்டிருந்தோம். கீழே பழைய பனி உறைந்து கட்டியாகி வழுக்கி விட்டுக் கொண்டிருந்தது. கவனமாக நடக்க வேண்டும். அப்படியும் நான் வழுக்கி விழுந்தேன். எனது ஷுவின் பிரச்சனையா இல்லை நான் நடப்பதில் பிரச்சனையா? தெரியவில்லை. பனியில் வழுக்கி விழுவது புதிதல்ல எனக்கு. நார்வே Tromsoவில் நடுரோட்டில் வழுக்கி விழுந்து என் செலஃபீ ஸ்டிக்கை உடைத்தேன். Dilwale dulhaniya படத்தின் போஸ்டரை வைத்திருந்தார்கள். குளிரில் கை கால் எல்லாம் விறைத்தது போல் ஆகிவிட்டது. அதே தளத்தில் உள்ளே இருந்த உணவகம் சென்றோம்.பீர் வைத்திருந்தார்கள். குளிருக்கு உட்கார்ந்து ஒரு பீர் அருந்தினோம். விலை கொஞ்சம் அதிகம் தான்.இருந்தாலும் ஸ்விட்சர்லாந்தில் mount tiltisஇல் உட்கார்ந்து பீர் அடித்தோம் என்ற வரலாறு இருக்கும் அல்லவா. அப்போது தான் கவனித்தேன். அங்கு இருந்தவர்களில் முக்கால்வாசி பேர் இந்தியர்கள்.பின் இறங்கி முதல் தளம் சென்றோம். அங்கு கொஞ்ச நேரம் வெயில் அடித்து பின் மீண்டும் தூறல் ஆரம்பித்தது. மணி மாலை நான்கு. போதும் என கீழே இறங்கிவிட்டோம். ரயில் நிலையத்தில் யாரும் இல்லை. அருகே இருந்த கடைக்குச் சென்று இன்னொரு பீர் வாங்கிக்கொண்டு கடையில் இருந்தவளிடம் வெளியே வைத்து பீர் அருந்தலாமா என்று கேட்டுக்கொண்டு அவள் அனுமதித்தவுடன் ஆரம்பித்தோம். நாங்கள் திரும்பிச் செல்ல வேண்டிய எங்கள் Lucern ரயில் நின்று கொண்டிருந்தது. ரயில் 4.20க்குத்தான் கிளம்பும். ஸ்விட்சர்லாந்து கடிகாரத்திற்கு மட்டும் பிரசித்தம் இல்லை. நேரநிர்வாகத்திற்கும் மிக பிரசித்தம்.4.20 என்றால் சரியாக அந்த நேரத்திற்கு எடுத்துவிடுவார்கள். ரயில் மட்டுமல்ல ஸ்விசர்லாந்து எங்குமே எல்லாவற்றிலும் நேரநிர்வாகத்திற்குப் பெயர் போனவர்கள். Lucernலும் மழை பெய்து கொண்டிருந்தது. ரயில் நிலையம் அருகே ஒரு பாகிஸ்தானிய கடையில் நான் எனது இரவு உணவை முடித்துக்கொண்டேன். நாங்கள் மட்டும்தான் வாடிக்கையாளர். அந்தக் கடைக்காரர் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவன் அவரைக் கேள்வியால் குடைந்து கொண்டிருந்தான். திரும்பி செல்லும் வழியில் நிறைய கடைகள் பூட்டியிருந்தன. அன்று ஞாயிற்றுக்கிழமை. ஒரு புத்தகத்தில் படித்தேன் ஞாற்றுக்கிழமை ஸ்விஸ்க்காரர்கள் வேலை செய்யவே மாட்டார்கள். வேலை என்றால் வீடு துடைப்பதோ அல்லது குப்பையைப் போய் வெளியே கொட்டவோக் கூட மாட்டார்கள். கிறிஸ்துவத்தில் அன்று ஓய்வுதினம். ஞாயிற்றுக்கிழமை என்பது கடவுளுக்கான தினம் என்பதால். ஆனால் அதை இப்போது எல்லாம் பின்பற்றமுடியாது. ஒரு சில கடைகள் திறந்தே இருந்தன.

அடுத்த நாள் Interlaken. அது ஒரு பெரிய கிராமம் என்று சொல்லலாம். இங்கு தான் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் வந்து அறை எடுத்துத் தங்குவார்கள். அதனாலேயே இங்கு விலை அதிகமாக இருக்கும். அதே போல் நிறைய சுற்றுலா பயணிகளுக்கான விற்பனையகம் இருக்கும். வேறு பல Parasailing போன்றவைகளும் உண்டு. மிக அழகான இடம். கிராமத்தின் நடுவே ஆங்காங்கே ஓடைகள். சுற்றி மலைகள். இளைப்பாற சிறு சிறு கடைகள். அவன் முதல் வெளிநாட்டு பயணம் என்பதால் எல்லாவற்றையும் மெல்ல நடந்து பார்த்துக்கொண்டு வந்தான். எனக்கு வேகமாக நடக்க வேண்டும். ஏதோ ஒன்றை பார்க்காமல் விட்டு விடுவோம் என்பது போல். சரிப்படாது என்று அவனை பஸ்ஸில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் ஏரி இருந்த இடத்திற்கு அனுப்பி விட்டேன். உண்மையில் நானும் போகவேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அதற்கென்று டிக்கெட் விலை அதிகமாக இருந்தது. அவன் சுவிஸ் பாஸ் வாங்கி இருந்தான். அதனால் அவன் ஸ்விசர்லாந்து முழுக்கு எந்த பஸ்சிலும் ரயிலும் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம். அவனும் பாஸை முழுவதுமாக பயன்படுத்த ஆவலோடு இருந்தான். அவனை ஏரியை சுற்றிவரும் பஸ்சில் ஏறச்செய்து நான் இங்கு சுற்றிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அவனுக்கும் சந்தோஷம் தான். 4மணிக்கு அதிக பட்சம் பட்சம் 4.30க்கு கண்டிப்பாக திரும்பி வருமாறு சொல்லியிருந்தேன். அங்கே வேடிக்கை பார்த்து சுற்றிக்கொண்டிருந்தேன். தூறல் வந்தும் நின்றும் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. மணி 4ஆனது 4.30 பின் 5. அவனைக் காணவில்லை. நான் எங்கும் லோக்கல் சிம் உபகோப்படுத்த மாட்டேன் என்பதால் என்னால் அவனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கிளம்பி விடலாமா என்று நினைத்தேன். அடுத்துப் போவதாக இருந்தது Grindelwald. அரைமணிக்கு ஒருமுறை இங்கிருந்து அதற்கு ரயில். காத்திருக்கலாமா இல்லை கிளம்பிச் சென்று விடலாமா? இது போன்று மிக சகஜமாக நட்பு பாராட்டும் லௌகீகமான ஆட்கள் சிலர் அவர்களுக்கு சௌகரியமான அடுத்த ஆள் கிடைத்ததும் நம்மிடம் எந்த விதமான தகவலும் சொல்லாமல் அங்கு தாவிவிடுவார்கள். இப்போது அவன் போகும் இடத்தில் வேறு யாராவது இந்தியர்களை சந்தித்து அவர்கள் காரிலேயே பயணம் செய்கிறார்கள் ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கிறார்கள் தன்னையும் சேர்ந்து கொள்ள அழைக்கிறார்கள் என்றால் எனக்குத் தகவல் சொல்லிவிட்டு அவர்களோடு சேர்ந்து கொள்வதுதான் முறை. ஆனால் சிலர் எதுவும் சொல்லாமல் அவர்கள் பாட்டுக்கு சென்று விடுவார்கள். நானே எவ்வளவு பேரைக் கண்டிருக்கிறேன். திரும்பி வந்து ஜி அவங்க கூடயே போய்ட்டேன் ஜி செம என்ஜாய் என்று கூறுவார்கள். இவர்கள் தான் மேலே மேலே போய்க்கொண்டிருப்பார்கள். போய் விடலாம் என்று தான் பார்த்தேன். கொஞ்ச நேரம் காத்திருக்கலாம். நியாயமான காரணமாக இருந்தால். 5.20க்கு வந்து சேர்ந்தான். அங்கு சுற்றிப்பார்க்க நேரமே இல்லை. பேருந்து பயணமே நிறைய நேரம் எடுத்துக்கொண்டது என்றான். கையில் வித விதமான சாக்லேட் பொட்டலங்கள் வைத்திருந்தான். அங்கே சென்று சூப்பர்மார்கெட் போய் சாக்லேட் வாங்கி வந்திருக்கிறான். சுற்றுலா என்பதே புகைப்படம் எடுப்பதும் ஷாப்பிங் செல்வதும் தானே! அங்கிருந்தே Grindelwald சென்றோம். அந்த கிராமத்தை நிறைய நேரங்களில் புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன். இருபுறமும் கடைகள் நடுவில் சாலை. பின்னணியில் பெரிய மலை. மனஎழுச்சி தரும் புகைப்படம். அந்தச் சாலையில் நடந்து போக வேண்டும் என்பது கனவாக இருந்தது. இன்று அங்கு நடந்து சென்று கொண்டிருக்கிறேன். அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தோம். தரையில் இருந்து உயரத்தில் நடப்பது போல இருந்தது. இன்னும் கொஞ்சம் உயரம் போகலாம் என்று கடையில் பீர் வாங்கி அங்கு சாலையோரம் இருந்த திடலில் வைத்து மலையைப் பார்த்தவாறு அருந்தினோம். திரும்பி Lucern ரயிலில் செல்லவேண்டும். ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்து சில்லறை வாங்கிக்கொண்டேன். ஸ்விசர்லாந்து மிகவும் tourist friendly நாடு. பயணிகளுக்கு இன்முகத்துடன் எல்லாவற்றையும் விளக்கமளித்து
உதவி செய்கிறார்கள். பொது இடங்களில் மது அருந்தலாம். எவ்வளவு கொடுத்தாலும் சில்லறை இல்லை என்ற பேச்சே கிடையாது. ஒரு முறை மூன்று francகிற்கு 100franc கொடுத்து சில்லறை பெற்றேன். எங்குமே முகம் காட்டவில்லை. இவ்வளவு இந்தியர்கள் இங்கு வருகிறார்கள். எவ்வளவு பேரைச் சமாளித்திருப்பார்கள். அதன் பின்பும் இவர்களால் இந்த வரவேற்பைத் தரமுடிவது ஆச்சர்யம்தான். திரும்பி ரயில் பயணம். இரண்டு பீர் மிச்சம் இருந்தது. ரயிலில் அருந்தலாமா என்று டிக்கெட் பரிசோதகியிடம் கேட்டோம். ‘You can drink anywhere you want’ என்றாள். நானெல்லாம் ஸ்விசர்லாந்தில் பிறந்திருக்க வேண்டியவன். செல்லும் வழியில் மிக அழகான கிராமங்கள். சுற்றி மலை.அதன் கீழ் ஏரி. அதன் கரையில் வீடுகள். ‘அவன் இவன்’ படத்தில் வரும் ‘ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம் அதன் அடிவாரம் ஒரு வீடு‘. இது போன்ற நேரங்களில் எல்லாம் அந்தப் பாடல் கண்டிப்பாக என் நினைவுக்கு வரும்.

ஹாஸ்டெல் சேர இரவாகிவிட்டது. மறுநாள் அவன் அறையைக் காலிசெய்து விட்டு ஒரு சாக்லேட் பேக்டரி போய் பார்த்து விட்டு பின் ஜெனீவா போவதாக இருந்தான். நாளை மறுநாள் அவனுக்கு விமானம். நான் வேறு எங்காவது போகலாம் என்று நினைத்திருந்தேன். கடைசி நேரத்தில் தான் பார்த்தேன். நானும் இன்று வரைதான் ஹாஸ்டல் முன்பதிவு செய்திருந்தேன். இன்று கிளம்பி நான் Zurich செல்ல வேண்டும். எனக்கு இங்கு மூன்று நாட்கள் முழுவதுமாய் இருப்பதாகவே ஏனோ மனதில் பதிவாகியிருந்தது. நானும் அறையைக் காலி செய்து விட்டு இருவரும் ரயில் நிலையம் சென்றோம். அங்கிருந்து Zurich. அவனுக்கும் எனது ரயில் தான். ஆனால் இடையிலே இறங்க வேண்டும். அவனது நிலையம் வந்தவுடன் இருவரும் விடைபெற்றோம். என் வாழ்க்கையில் திடீரென்று இரண்டு நாட்கள் மட்டும் என்னுடன் இருந்து பின் மறைந்து விட்டான். இனிமேல் ஒரு போதும் எங்கள் பாதை சந்தித்துக் கொள்வதில்லை என்றெல்லாம் உணர்ச்சி பொங்க சொல்ல ஆசைதான். ஆனால் பயபுள்ள உடனடியாக facebookலும் இன்ஸ்டாக்ராமிலும் ரிக்குவெஸ்ட் கொடுத்து நண்பனாகிவிட்டான். Zurich வந்து சேர்ந்த போது மழை பெய்து கொண்டிருந்தது. ஸ்விசர்லாந்து முழுக்க மழை என்னைத் தொடந்து கொண்டிருந்தது. இதமான மழை தான். Zurichஇல் tourist ஹாஸ்டல் தான். நல்ல பெரிய பார் வசதியுடன் கூடிய ஹாஸ்டல். புறநகரில் இருந்தது. ரயிலில் தான் மையப்பகுதிக்கு செல்லவேண்டும். Zurichதான் நகரம் போல் இருந்தது.. அன்று முழுக்க Zurichஇல் தான் சுற்றினேன். நகரமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. நகரத்தை ட்ராம்களும் ஓடைகளும் கிழித்துச் சென்றன. மையப்பகுதியில் நிறைய சுற்றுலாப் பயணிகளைக் காண முடிந்தது. பின் ட்ராம்களில் ஏறி வெளிப்பகுதிகளில் சுற்ற ஆரம்பித்தேன். புறநகர் வழக்கம் போல் ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. மாலை ட்ராம்களில் நல்ல கூட்டம். ஏரிப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தேன். மறுநாள் அங்கிருந்து Bern சென்று எட்டிப் பார்த்து விட்டு திரும்பி வரலாம் என்று உத்தேசம். Bernதான் ஸ்விசர்லாந்தின் தலைநகரம். ரயிலில் Bern சென்றேன். ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வரும் போது படியில் வழுக்கி விழுந்தேன். காலில் லேசான சுளுக்கு போல தெரிந்தது. நல்ல வேளை ஒன்றும் இல்லை. இன்னும் எத்தனை நாடுகள் போக வேண்டியது உள்ளது. அடிபட்டிருந்தால் பெரிய சங்கடமாகி இருக்கும். Old Bern சென்றேன். அதுதான் முக்கிய சுற்றுலாத்தளம். அங்கிருந்த தெருக்கள் தேவாலயங்கள் என்று சுற்றிக்கொண்டிருந்தேன். 800வருடங்கள் பழமையான கடிகார கோபுரத்தை எல்லோரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தத் தெருவில் இருந்த ஐன்ஸ்டீனின் வீட்டைப் பார்க்கச் சென்றேன். நான் சென்ற போது அவர் வீட்டில் இல்லை. இரண்டாவது மாடியில் சிறிய ஒற்றை படுக்கை அறை கொண்ட வீடு. இரண்டு வருடங்கள் இந்த வீட்டில் வாழ்ந்து இருக்கிறார். Theory of relativity இங்கிருக்கும் போது தான் எழுதி இருக்கிறார். அங்கிருந்து மீண்டும் ரயில் நிலையம் செல்லும் வழியில் ஈழப்படுகொலை நினைவு தினத்திற்கான கூட்டத்திற்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. ஈழத்தமிழர்கள். என்னதான் எத்தனை குறை சொன்னாலும் எந்த நாட்டு அகதிகளையும் வரவேற்று அவர்கள் மறுவாழ்க்கைக்கு வழி செய்து கொடுப்பதில் ஐரோப்பாவைப் பாராட்டியே ஆக வேண்டும். ரயில் பிடித்து மீண்டும் Zurich வந்துவிட்டேன். ஸ்விட்சர்லாந்தில் பாடல் கேட்டுக்கொண்டே ரயிலில் பயணம் செய்வது இனிமையான அனுபவம். மறுநாள் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாக்குச்(Vienna) செல்லவேண்டும்.

(பயணிப்போம்…)

பின்னூட்டமொன்றை இடுக