இஸ்தான்புல் மற்றும் துபாய் பயணம் – 3

மறுநாள் எழுந்து கிளம்ப ஒன்பதரை மணி ஆகிவிட்டது. ஒரு நகரத்திற்கு  எப்போது வரவேண்டும் எப்போது அங்கிருந்து கிளம்ப வேண்டும் , எந்தெந்த இடங்களைப்  பார்க்க வேண்டும் என்ற ஒரு மேம்போக்கான திட்டம்தான் இருக்கும். அங்கு சென்ற பின் நிலைமைக்கேற்ப அவற்றில் எவையெல்லாம் பார்க்க முடியுமோ அவற்றை மட்டும் பார்த்து விடுவேன். இஸ்தான்புல்லுக்கும் அப்படியே. எவை வெகு முக்கியமானதோ அதை முதல் அல்லது இரண்டாம் நாளே பார்த்துவிடுவது நல்லது. நாம் தள்ளிப்போட தள்ளிப்போட சில நேரங்களில் அதைப் பார்க்கமுடியாமல் திரும்பி வர நேரிடும். அல்லது மோசமான நேரங்களில் அதைப் பார்க்க நேரிடும். அப்படி எதையும் இதுவரை நான் மிஸ் செய்தது இல்லை. ஜோர்டானில் Wadi Rum பகுதியை மட்டும் பார்க்கமுடியாமல் போயிற்று. அதுவும் எனது சரியான திட்டமிடாததனால். நான் சில நேரங்களில் சில இடங்களை இரண்டாவது முறை சென்று பார்த்த போது அப்படி சில மோசமான அனுபவம் நேர்ந்திருக்கிறது. அதனால் முதல் முறை  தவறாகப்  போய்விட்டால்  இன்னொரு முறை போய்ப் பார்த்துக்கொள்ளலாம். நான் எகிப்து பிரமிட் முதல் முறை சென்று பார்க்கும் போது கூட்டம் குறைவாக மிக அருமையாக இருந்தது. இரண்டாம் முறை சென்ற போது அது உள்ளூர் விடுமுறையோடு சேர்ந்து வந்தது. அதனால் உள்ளூர் மக்களின் கூட்டம். எனக்கு அந்தக் கூட்டம் பிரச்சனையே  இல்லை. நான் மக்களையும் இடங்களையும் வேடிக்கை பார்ப்பவன். ஆனால் எகிப்தில் சுற்றுலா இடங்களில் பயணிகளுக்குத் தொடர்ந்து  தொல்லை கொடுப்பார்கள். சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை நம்மை மிகச் சாதாரணமாக ஏமாற்றப்பார்ப்பார்கள். என்னைப் பல இடங்களில் கடுப்பேற்றினார்கள். எகிப்தில் மிக மிக கவனமாக இருக்கவேண்டும். அப்படி ஸ்கேம் செய்ய நினைத்த சிலபேருடன் அன்று வாக்குவாதத்தில் முடிந்தது.  ‘Go to your country’ என்று உடைந்த ஆங்கிலத்தில் சொன்னான். கிட்டத்தட்ட எனது பயணத்தின் கடைசி நாள் நான் அன்று சென்றது. இதுவே முதல் நாளாக இருந்தால் நான் சிறிது பயந்து போயிருப்பேன். ஆனால் அப்போது எகிப்தில் பெரிய ரௌடியாக பார்ம் ஆகி இருந்தேன்!!  அவனிடம் “மூடிட்டு போடா பேப்**. ஐ வில் கோ வென் ஐ வாண்ட்” என்று அவனுக்கு தமிழும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது என்ற தைரியத்தில் முகத்தில் எந்த வித பாவனையும் இல்லாமல் சொன்னேன். Rio De Janiro வில் இரண்டாம் முறையாக கிறிஸ்ட் சிலையை பார்க்கச் சென்ற போது மழை தூறிக்கொண்டே இருந்தது. அந்தச் சிலையை வீடியோக்களில் பார்த்திருப்பீர்கள். மலைமீது இருக்கும் சிலை. பனிமூட்டத்தின் காரணமாக அந்தச் சிலையை சுத்தமாக  பார்க்கவே முடியவில்லை.   இத்தனைக்கும் சிலைக்கு மிக அருகில் நிற்கிறேன். அவ்வளவு அடர்த்தியான பனிமூட்டம். இஸ்தான்புல்லில் அப்படி பார்க்க வேண்டிய  ‘ஒரு’ இடம் என்று எதுவும் இல்லை. பார்க்க வேண்டியது அந்த நகரமேதான்.

வெளிநாட்டுக்குப் போகிறேன் என்றால் அங்கு என்ன பார்க்க இருக்கிறது என்று கேட்பதே எரிச்சலூட்டுகிற விஷயம் . நான் இஸ்தான்புல் போகிறேன் என்றதும் அங்கு என்ன இருக்கிறது என்றே கேட்டார்கள். என்னிடம் கேட்பவர்களுக்கு உண்மையில் என்ன சொல்ல என்று எனக்குத் தெரியாது. ஒரு புது உலகில் எல்லாமே புதியவை தான். புதியவற்றை பார்க்க போகிறேன் என்று தான் சொல்ல வேண்டும். எனக்கு ஈரான் போக வேண்டும் தெஹ்ரான் நகரத்தை பார்க்க வேண்டும் என்று ஆசை. ஈரானிய படங்களினால் வந்த ஆசை. அங்கு என்ன இருக்கிறது என்று கேட்டால் என்ன சொல்ல. அதைச் சொன்னால் புரியுமா?      Taraneh Alidoostiயை பார்க்கப்போகிறேன் எனலாம் (நானெல்லாம் எங்கேனும் த்ரிஷாவை பார்த்துவிடலாம் என்றுதான் சென்னைக்கே வந்தேன்) முதல் முதலில் நான் சில நண்பர்களுடன் Phuket சென்று இறங்கி காலையில் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த போது  நான் பெரும் மனஎழுச்சியில் இருந்தேன். அது எங்கள் அனைவருக்குமே முதல் வெளிநாட்டு சுற்றுலாப்பயணம். (அப்போது மலேசியாவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.அதனால் மலேசியாவை சுற்றுலாப்பயணம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது) ஆனால் கூட வந்தவர்கள் ஒண்ணுமே இல்லையே என்று சொன்னார்கள். பின் இரவு முழுக்க Nude கிளப்புகளாக  சுற்றித்திரிந்த பிறகுதான் அவர்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்கள். புதுக் கலாச்சாரத்தை, புது மனிதர்களை, புது இடங்களைப் பார்ப்பது எப்படி ஒன்றுமே இல்லை என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை . பயணம் எல்லோருக்குமானதல்ல. அதற்கென்று ஒரு மனஅமைப்பு வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். சிலபேர் பயணம் செய்வதை வெட்டிச் செலவு என்பார்கள். என்னிடம் கேட்டால் ஆப்பிள் போன் வாங்குவதும் ஆடி கார் வாங்குவதும் தான்  வெட்டிச்செலவு என்பேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் மீது ஆர்வம். இப்போது நான் தனிமையில் உட்கார்ந்திருக்கையில் என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் பயணம் செய்ததுதான் என் சாதனையாகவும்  பயணம் சென்ற நாட்கள்தான் நான்  நினைத்து அசைபோடும் நாட்களாகவும்  உள்ளன . எந்த ஒரு கிளாசிக் பாடலையும் கேட்கும் போது பயணம் சென்ற ஏதோ ஒரு நாள் தான் முதலில்  ஞாபகத்தில் வருகிறது. எனது கனவுகளுக்கு கச்சாப் பொருட்களைப் போல இந்தப் பயணங்கள்.

 இஸ்தான்புல் நகரம் மிதமான குளிராக இருந்தது. இன்றைய முதல் திட்டம் Istanbulkart என்ற கார்டு வாங்குவது. இதை ரீசார்ஜ் செய்து இஸ்தான்புல் முழுக்க அனைத்து பஸ்களிலும், மெட்ரோக்களிலும், ட்ராம்களிலும், Ferryகளிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.  எனது திட்டம் இஸ்தான்புல் முழுக்க பொதுப் போக்குவரத்துகளில் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வது. டாக்சிகளை முடிந்த வரை தவிர்ப்பது. இது செலவை பெருமளவு குறைக்கும். மக்களோடு மக்களாக கலந்து கொண்டு வேடிக்கை பார்க்கலாம். பொதுப் போக்குவரத்து இஸ்தான்புல் முழுக்க இணைக்கிறது. அதேபோல் இஸ்தான்புல்லில் இருந்த தினங்களில் டாக்சியை பயன்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. டாக்ஸி ஓட்டுனரிடம் பத்து நிமிடம் பேசி  அந்த நாட்டைப் பற்றியே அறிந்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையும் எனக்கு  இல்லை. இஸ்தான்புல் ஸ்டேஷன்களில் டிக்கெட் கவுண்டரே இல்லை.  டிக்கெட் வெண்டிங் மெஷின்தான் இருக்கிறது. கார்டு வாங்கவேண்டுமானாலும் டிக்கெட் வாங்கவேண்டுமானாலும் அந்த மெஷின் மூலம் தான் எடுக்க முடியும். இது எந்த விதத்தில் எல்லாப் பயணிகளுக்கும் உதவிகரமானதாக இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் மெஷின்கள் எல்லா ஸ்டேஷன்களிலும் இருந்தன. காலையுணவை போகும் வழியில் முடிந்தால் பார்த்துக்கொள்ளலாம். எனக்கு உணவு மீது பிரியமோ விதவிதமான உணவு திங்க வேண்டும் என்ற ஆசையோ கிடையாது. அதனால் ஏதேனும் ஒரு வேளை உணவை தவிர்க்க வேண்டியது இருந்தாலும்  எந்தப் பிரச்னையும் இல்லை.

நான் முதல் நாள் வந்த சாலையே டிராம்களுக்கான சாலைதான். ட்ராம்களும் மெட்ரோ ரயில்கள் போல்தான் இருக்கிறது. ஆனால் சாலைமீது செல்கிறது. டிராம் ஸ்டேஷன்கள் என்பவை மெட்ரோ ஸ்டேஷன்கள் போல இல்லை.   நீண்ட பேருந்து நிறுத்தம் போல சாலையில் உள்ளது. அதன் ஓரத்தில் இரண்டு டிக்கெட் வெண்டிங் மெஷின்கள் இருக்கும். அதிலே டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம், கார்டை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அந்தச் சாலை வழியிலேயே நடந்து சென்றேன். நிறைய சுற்றுலா பயணிகளைக் காண முடிந்தது. நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் இருந்த டிராம் ஸ்டேஷனை அடைந்து அங்கு அந்த கார்டை எடுக்க முடியுமா என்று பார்த்தேன். அது முக்கியமான டிராம் ஸ்டேஷன் போலும் டிக்கெட் மெஷினில் கூட்டம் அலைமோதியது. இதில் எப்படி கார்டை எடுப்பது. அதன் செய்முறை நமக்கு தெரியாது. காலியான மெஷினாக இருந்தால் பழகலாம். அங்கேயே நின்று என்ன செய்ய என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அங்கே சிலர் அந்த கார்டை ப்ளாக்கில் விற்றுக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே மெஷினில் இருந்து எடுத்து இது போல் கூட்டமான நேரங்களில் சுற்றுலா வருபவர்களிடம் கொஞ்சம் கூடின விலைக்கு விற்பவர்கள். என்னிடம் வந்து கார்டு வேண்டுமா என்று கேட்டான்  ஒருவன். முப்பது வயதிருக்கலாம் அவனுக்கு. வேண்டாம் என்றேன். பாகிஸ்தான்? என்று கேட்டான். இந்தியா என்றேன். எல்லாம் அறிந்த தெளிவுடன் சிறிது ஆவேசமாக அவன் மொழியில் ஏதோ சொன்னான். இந்தியா, முஸ்லீம் என்பது மட்டும் புரிந்தது. புரியவில்லை என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டேன். மீண்டும் கையைக்  காற்றில் செங்குத்தாக இறக்கி செய்கையுடன் அதையே திரும்பச் சொன்னான். ஓரளவு புரிந்தது. இதை எதிர்பார்க்கவில்லை. இந்தியாவில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதாகச் சொல்கிறான் போல. சுதாரித்துக்கொண்டேன். ‘யு காஷ்மீர்’ என்றான். அதேதான். இல்லை சென்னை என்றேன். அவனுக்கு சென்னையோ டெல்லியோ தெரிந்திருக்காது, ஏன் இந்தியாவைத்  தெரிந்துவைத்திருப்பதே அதிசயம் தான். அப்படித்தான் இருந்தான். இப்போது அதே தீவிரத்துடன் அதே செய்கையுடன் அதையே திரும்பச் சொன்னான். கூடுதலாக காஷ்மீர் என்பதையும் சேர்த்துக் கொண்டிருந்தான். இனி அவனை குழப்புவது தான் நல்லது.’யா, இந்தியா, காஷ்மீர்’ என்று புரியாததுபோல் முகத்தை வைத்துக்கொண்டு புரிந்தது போல் தலையாட்டினேன். அவன் சொன்ன செய்தி எனக்கு புரியவில்லை என்று  அவனுக்குப் புரிந்தது. உடன் கார்டு விற்றுக்கொண்டிருந்த இன்னொருவனை அழைத்து என்னிடம் கேட்கச்சொன்னான். அவனும் எந்த நாடு? இந்தியா. என்ன மதம்? என்றான். ஏனோ முன்னெச்சரிக்கையாக புத்திஸ்ட் என்றேன்.( நாட்டுக்காகவோ மதத்திற்காகவோ என் உயிரை விடும் அளவுக்கோ அடி வாங்கும் அளவிற்கோ  எந்த நாடும் மதமும் எனக்குத் தகுதியானது இல்லை)அவர்கள் மிரட்டவெல்லாம் இல்லை. சற்று ஆவேசத்தோடும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடும் கேட்டுக்கொண்டிருந்தனர். நான் இந்து என்று சொன்னால் கூட என்னிடம்  முறையிட்டிருப்பார்கள். நான் நின்று கொண்டிருந்தது ஒரு கூட்டமான மையப்பகுதி. அதனால் எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டிருக்காது. அவன்  ஒரு வாய்ச்சவடால் ஆசாமி என்பது தெளிவாகத் தெரிந்தது. நான் முந்தின நாள் தான் இஸ்தான்புல் வந்து இறங்கினேன். அதனால் இன்னும் ரவுடியாக பார்ம் ஆகவில்லை. இதே ஒரு நான்கு நாட்கள் கடந்து நடந்திருந்தால் இந்நேரம் ‘காஷ்மீர் பைல்ஸை’ முன்வைத்து வாதம் பண்ணி இருப்பேன். ஆனால் அன்று அந்த முடிவே சிறந்ததாகவே பட்டது. முதலில் வந்தவன் எப்படியாவது அவன்  சொல்லவந்ததை என்னிடம் முழுவதுமாக தெரியப்படுத்த வேண்டும் என்று உந்துதலோடு இருந்தான். ஆனால் இரண்டாமவன் ‘இவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான்’ என்று அவர்கள் மொழியில் ஏதோ சொல்லி கூட்டிச்சென்று விட்டான். நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். அவர்களும் இன்னும் அங்கேயேதான் கார்டு  விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பழைய பேண்ட் டீ ஷர்ட் அணிந்திருந்தார்கள். எந்த இஸ்லாமிய அடையாளம் இல்லை.( இஸ்தான்புல் முழுக்க பெரும்பாலும் எந்த ஆணும்  இஸ்லாமிய அடையாளங்களோடு மீசைமழித்த தாடியோ குல்லாவோ அணிந்து இருக்கவில்லை.) சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அதனால் நோன்பும் இருக்கவில்லை. இவர்கள் தீவிர இஸ்லாமியர்களும்  இல்லை. இஸ்லாம் இஸ்லாமியர்களை பற்றிக் கவலையும் இல்லை. இவர்கள் சுற்றுலா வருபவர்களை ஏமாற்றப் பார்ப்பவர்கள். அதற்கு ஏதேனும் காரணம் சொல்லிக்கொள்கின்றனர். எந்த நாட்டிலும் நாம் முதலில் எதிர் கொள்வது இவர்களைத்தான். ஏமாற்ற நினைப்பவன்தான் முதலில் நம்மை வந்து அணுகுவான். மற்ற சாதாரணமானவர்கள் அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று சென்றுகொண்டிருப்பார்கள். தானாக வந்து பேச்சுக்கொடுப்பவர்களிடம், உதவி செய்கிறேன் என்று சொல்கிறவர்களிடம் நோ தேங்க்ஸ் என்று விலகிச் செல்வது நல்லது. அதே போல் அவர்களை வைத்து அந்த ஊரையே, நாட்டையே அப்படித்தான் என்று முடிவுக்கு வருவதும் சரியானது அல்ல. இந்த மாதிரி ஆட்களையெல்லாம் சுற்றுலா தளத்திற்கு அருகே வைத்துக்கொண்டு துருக்கி ஐரோப்பிய யூனியனில் சேருவது எப்படி சாத்தியமாகும்.

2005இல் இருந்தே துருக்கி எப்படியாவது ஐரோப்பிய யூனியனில் சேர முயன்று வருகிறது. அவர்களது எல்லா திட்டங்களும் அதை நோக்கியே இருந்தது. ஆனால் ஐரோப்பிய யூனியன் அதை சேர்க்காமல் மக்கள்தொகை, பொருளாதாரம், மதம், மனிதவுரிமை என்று காரணம் காட்டி தவிர்த்தே வருகிறது. அதிலும் இப்போதைய துருக்கிய அதிபர் Erdogen, தனது அதிபர் பதவியின் அதிகாரத்தை அதிகரித்தல் மீண்டும் இஸ்லாமியத்தை மீட்டெடுத்தல் என்பதை நோக்கி நகர்ந்தது அதன் சாத்தியத்தை குறைத்துள்ளது. வளர்ந்த ஐரோப்பிய நாடுகள் தேசியவாதத்தை சந்தேகக் கண்ணோடே பார்க்கிறது. ஏனெனில் இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமே தேசியவாதம் தான் என்று  அவை அறிந்துகொண்டன. ஆனால் துருக்கி தேசியவாதத்தையே முன்னிறுத்துகிறது. அதிலும் கடந்த சில ஆண்டுகளாக  இந்தியாவைப் போல் தேசியவாதத்தையும் மதவாதத்தையும்  முன்னிறுத்த ஆரம்பித்திருக்கிறது. அதனால்  ஐரோப்பிய யூனியனில் துருக்கியை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்.  வருங்காலத்தில் அது ஐரோப்பிய யூனியனுக்கு எதிர் நிலைப்பாடு எடுத்தும் தன்னை  இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அங்கிருந்து  நடந்து Aksharay மெட்ரோ நிலையம் சென்றேன். அங்கு டிக்கெட் மெஷினில் ஆளே இல்லை. அங்கு சென்று முயன்று பார்த்தேன். கார்டு எடுக்க முடியவில்லை. ஆங்கிலம் செலக்ட் செய்தால் முதல் பக்கம் மட்டும் ஆங்கிலத்தில் வருகிறது . அடுத்த பக்கம் போகும் போது மீண்டும் துருக்கிய மொழிக்கு மாறிவிடுகிறது. துருக்கிய மொழிக்கு லத்தீன்  எழுத்துருக்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். அதனால் வாசிப்பது எளிது. ஆனால் அர்த்தம் புரியாது. அப்புறம் தான் தெரிந்தது அந்த மெஷினில் அந்த கார்டை எடுக்க முடியாது போல. சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று வந்த வழியிலேயே மீண்டும் நடந்து ஹாகிய சோபியாவை(Hagia Sophia) நோக்கிச் சென்றேன். அந்த சாலையிலேயே கொஞ்சம் தூரம் செல்லவேண்டும்.   டிராம் போகும் அகன்ற சுத்தமான சாலையின் இரு பகுதியிலும் மணி எக்ஸ்சேன்ஜ் , வங்கிகள், நினைவுப்பொருட்கள் வாங்கும் கடைகள், உணவகங்கள், ட்ராவல் ஏஜென்ட்  கடைகள் என்று வரிசையாக இருந்தன. கிட்டத்தட்ட யாருமே கொரோனாக்கான முகக்கவசம் அணிந்திருக்க வில்லை. நடந்த வழியிலேயே ஒரு டிராம் ஸ்டேஷனில் கார்டு எடுக்க முடிந்தது. ஹாகிய சோபியா இரண்டு கிலோமீட்டர் தூரம் தான். நடந்து கூட சென்று விடலாம். ஆனால் டிராமை பயன்படுத்திப் பார்ப்பதற்காக அதில் ஏறி ஹாகிய சோபியா சென்றேன்.

ஹாகிய சோபியாவும், நீலமசூதியும்(Blue Mosque)அருகருகே இருக்கிறது. இரண்டுக்கும் நடுவேயும், சுற்றியும்  ஒரு பூங்கா இருக்கிறது. நீலமசூதிக்கு நுழையும் முன்னர் வெளியே ஒரு நீள் வட்ட வடிவ வெட்டவெளி  இருந்தது. இது பைசான்டின் காலத்தில் குதிரை பந்தயம் ,சாரட் பந்தயம் நடத்தப்படும் இடம். உள்ளே நடந்து நீலமசூதி  நோக்கிச் சென்றேன். கும்மட்டம் மேல் கும்மட்டம் அடுக்கி வைக்கப்பட்டது போல் இருந்தது. பெரிய மசூதி. முன்பு பைசான்டின் அரண்மனை இருந்த இடத்தில் இந்த மசூதி 1616இல் சுல்தான் முதலாம்  அஹ்மத்வால்  கட்டிமுடிக்கப்பட்டது. அதனால் ‘சுல்தான் அஹ்மத் மசூதி’ என்று அழைக்கப்படுகிறது. இதன் உட்புறம் நீல வண்ண செராமிக் கற்களால்  உருவாக்கப் பட்டிருப்பதால் இது நீலமசூதி என்றும் அழைக்கப்படுகிறது. அங்கு சென்ற போது அது மதியதொழுகை நேரம் என்பதால் தொழுகை செல்பவர்களைத் தவிர யாரையும் உள்ளே விடவில்லை. அப்படியே கொஞ்ச நேரம் பூங்காவில் உட்கார்ந்திருந்தேன். பனிக்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்குவதால் மொட்டை மரங்களில் இப்போதுதான் இலைகள் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தன.  ஹாகிய சோபியாவில் எல்லாரும் உள்ளே சென்று கொண்டிருந்தார்கள்.  பல வருடமாக இஸ்தான்புல்லின் அடையாளமாக இருப்பது ஹாகிய சோபியா. ஆறாம் நூற்றாண்டில் பைசான்டின் பேரரசர் முதலாம் ஜஸ்டினியனால் கிறிஸ்தவ தேவாலயமாகக் கட்டப்பட்டது. ஓட்டோமான்களால் இஸ்தான்புல் கைப்பற்றப் பட்டபோது இங்கு பிரார்த்தனைக்கும், அடைக்கலமாகவும் குழுமியிருந்த மக்களை இஸ்லாமுக்கு மதம் மாறவும், மாறாதவர்கள் அடிமையாகவும் ஆக்கப்பட்டனர் .(இன்னொரு கதை, உள்ளே இருந்தவர்களை அழகான பெண்கள் தவிர்த்து மற்றவர்களை எல்லாம் அங்கேயே கொன்று தீர்த்தனர் என்று. பெண்களை என்ன செய்தார்களா? என்ன கேள்வி இது.நீங்கள் அந்த படையில் இருந்தால் அந்த பெண்களை என்ன செய்திருப்பீர்கள்?  ஆனால் இந்தக் கதை பெரும்பாலும் ஐரோப்பிய கிறிஸ்தவர்களால் சொல்லப்படுகிறது. இப்போதைய துருக்கியர்கள் தங்களை ஓட்டோமான்களோடு அடையாளப்படுத்திக் கொள்வதால் இதை ஏற்பதில்லை ) மன்னர் மெஹ்மத் தான் தன் படைக்கு உறுதியளித்த படி இஸ்தான்புல்லை கொள்ளையடிக்க, சூறையாட படைக்கு அடுத்த மூன்று நாட்கள் அனுமதி கொடுத்தார். இது ஒரு வழக்கமாகவே இருந்தது. அவரது படை என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்தார்கள். (இதை எழுதிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில்  அமெரிக்காவில் கறுப்பின அடிமைகள் எவ்வளவு மோசமாக  நடத்தப்பட்டார்கள் என்பதைப் பற்றி ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. வரலாற்றிலேயே சிறந்த கண்டுபிடிப்பு எது என்றால் மனிதன் விலங்கிலிருந்து வந்தவன் என்று கண்டுபிடித்ததுதான்.  கடவுளே நேரடியாக மனிதனைப்  படைத்தார் அதுவும் அவர் உருவத்திலேயே படைத்தார் என்று கண்ணாடி முன் நின்று சொல்லிக்கொண்டிருந்த போது,நீ ஒரு மிருகம்,ஒரு குரங்கு,சரியான நேரத்தில் சரியான இடத்தில இருந்த குரங்கு. அவ்வளவுதான் என்று கண்டுபிடித்தது.) மூன்றாம் நாள் மன்னர் ஒரு அறிவிப்பு விடுத்தார். ஓடி ஒழிந்த இஸ்தான்புல் நகரத்து மக்கள் எல்லோரும் திரும்பி வரலாம். அவர்களை யாரும் எதுவும் செய்யமாட்டோம். முன்பு போல அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழலாம். யாரும் துன்புறுத்தப்படவோ சொத்துக்களை பறிமுதல் செய்யப்படவோ மாட்டார்கள். அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களானாலும் அவர்கள் முன்பு என்ன அந்தஸ்தில் இருந்தார்களோ அப்படியே நடத்தப்படுவார்கள் என்று.(அது போலவே நடக்கவும் செய்தார்). பின் ஹாகிய சோபியா வந்த ஓட்டோமான் பேரரசர் அங்கு  தொழுகை நடத்தி அதை மசூதியாக மாற்றினார். ஓட்டோமான் வெற்றிக்கும் அந்த அரசின் விரிவாக்கத்துக்கும்  முக்கிய காரணமாக இருந்தவர்கள் ஜெனிஸரிகள் எனப்படும் உயர்ந்த அந்தஸ்துள்ள உள்ள படைவீரர்கள். ஒரு கட்டத்தில் ஓட்டோமான் அரசராக யாரை ஆக்கவேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர்கள் ஆனார்கள். பின் ஓட்டோமான் வீழ்ச்சிக்கும் காரணமானவர்களும் இவர்களே.

ஹாகிய சோபியா உள்ளே சென்றேன். அங்கும் தொழுகை நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களும் தனித்தனியாக ஒரு ஓரமாக தொழுகை செய்து கொண்டிருந்தார்கள். மற்றபடி எல்லோரையும் அனுமதித்திருந்தார்கள். மசூதி உள்ளே அவ்வளவு பராமரிப்பு இல்லாமல் இருந்தது. தேவாலயம் போல் தான் இருந்தது. துருக்கி 1923இல் குடியரசான பின்பு அதன் முதல் அதிபரானவர் முஸ்தபா கேமல். 1938இல் அவர் இறக்கும் வரை அதிபராக இருந்து ‘Ataturk’ அதாவது ‘நவீன துருக்கியின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.  துருக்கியில் பல சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர். ஒரு சர்வாதிகாரியாகவே செயல்பட்டார். பெரும்பான்மை இஸ்லாமிய நாட்டில் எதிர்பார்க்கமுடியாத சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். துருக்கியை மதச்சார்பற்ற நாடாக அறிவித்தார். பள்ளிகளில் பெண்களின் ஹிஜாப், புர்தா போன்றவற்றை தடை செய்தார். அரபு எழுத்தில் எழுதிக்கொண்டிருந்த துருக்கிய மொழியை லத்தீன் எழுத்துக்களுக்கு மாற்றினார். இஸ்லாமிய நாடுகளுக்கு உரிய வெள்ளிக்கிழமை விடுமுறையை மாற்றி ஞாயிற்று கிழமை விடுமுறையாக அறிவித்தார். இஸ்தான்புல்லை விடுத்து அங்காராவை தலைநகராக அறிவித்ததே இனி இது புதிய துருக்கி என்று அறிவிப்பதாகவே இருந்தது. அதற்காகவே கான்ஸ்டான்டிநோபிளையும் இஸ்தான்புல் என்று பெயர் மாற்றினார். இவரது சீர்திருத்தம் துருக்கியை மேற்கத்திய நாடுகளை போல மாற்ற வேண்டும் என்பதாகவே இருந்தது. அது சில நேரங்களில் எதிர்மறையான விளைவுகளையும், சில மக்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியது. முக்கியமாக இஸ்தான்புல்லின் தனித்தன்மை என்று எதுவெல்லாம் இருக்கிறதோ அவை எல்லாம் அகற்றப்பட்டன. அதே வரிசையில் ஹாகிய சோபியா 1935இல் மியூசியமாக மாற்றப்பட்டது. இப்போது 2020இல் அது மீண்டும் மசூதியாக மாற்றப்பட்டுள்ளது.தேவாலயத்திற்கேயான உட்புறம்  உயரமாக இருந்தது. மஞ்சள் நிற ஒளிவிளக்குகளை எரிய விட்டிருந்தார்கள். ஹாகிய சோபியாவோ அல்லது நீல மசூதிக்கோ எந்த அனுமதிக்கட்டணமும் கிடையாது.  ஒரு சிறிய அளவிலாவது கட்டணம் வைத்திருக்கலாம். குறைந்தபட்சம் வெளிநாட்டவர்களுக்கேனும்.  பராமரிப்புக்காகவாது பயன்படுத்திக் கொள்ளலாம். பயணிகள் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் இருந்துவிட்டு வெளியே வந்துவிட்டேன். மதியம் மசூதிக்கு அருகே McDஇல் மதிய உணவு முடித்துக்கொண்டேன். பின்பு கிராண்ட் பஜார் நோக்கி நடந்தேன். ஓட்டோமான் கான்ஸ்டான்டிநோபிளை கைப்பற்றிய உடனே கிராண்ட் பஜாரின் கட்டிட வேலை ஆரம்பமாகி 1460இல் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் துணிவகைகளும் நகைகளும் விற்கப்பட்டன. பின்னாட்களில் நேர்ந்த நிலநடுக்கங்கள், தீ விபத்துக்களில் இரையாகி அதை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்தான்புல் என்றால் சினிமாவில் காண்பிப்பது முதலில் ஹாகிய சோபியா அதன் பிறகு கிராண்ட் பஜார். நிறைய எதிர்பார்ப்புடன் போனேன். திருட்டு பொருட்கள் விற்கும் பஜார் போலவோ பழம்பொருட்கள் விற்கும் இடமாகவோ இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அது ஸ்பென்சர் பிளாசா போல் இருந்தது. துணிக்கடைகளும் சொவினியர் கடைகளும் இருந்தன. ஆனால் விலை நான்கு மடங்கு சொன்னார்கள்.கொஞ்சம் நேரம் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். Margot robbieயின் HarleyQuinn படம் போட்ட டீ-ஷர்ட் இருந்தது. வாங்கலாம் என்று பார்த்தால் அது சிறுவர்களுக்கான சைஸ். கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்து விட்டு வெளியே வந்தேன்.

வரும் வழியில் தான் பார்த்தேன். சாலையின் வலதுபுறம் ஒரு திடலுக்கு அருகே ஒரு பழைய  இரும்புத்தூண் உடைந்த கற்அமைப்பில் இருந்து முளைத்து நின்றுகொண்டிருந்தது. இது ‘ Column of Constantine ‘. கிபி 328இல் பைசான்டின் காலத்தில் கட்டப்பட்ட நினைவுச் சின்னம்.அமைக்கப்பட்டபோது ஐம்பது மீட்டர் உயரமும் மேலே ஒரு கான்ஸ்டான்டின் சிலையும் இருந்தது. இப்போது 35மீட்டரில் வெறும் இரும்புத் தூண் தான் இருக்கிறது. மாலை ஆகிவிட்டது. நடந்தே அறைக்கு வந்தேன். பின் இரவுணவுக்கு மீண்டும் சுற்றுப்புறத்தில் சுற்றி அலைந்தேன். இன்று எந்த உணவகத்திலும் கூட்டம் இல்லை. நான் மீண்டும் அதே உணவகத்தில் பார்சல் வாங்கிக்கொண்டு அதே கடையில் தண்ணீர் பாட்டிலும் வாங்கிக்கொண்டு அறைக்கு வந்துவிட்டேன்.

பின்னூட்டமொன்றை இடுக