வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம்-4

மறுநாள் க்ரெம்ளினில் Armour chamber மியூசியம் பார்க்க முடிவு செய்திருந்தேன்.லெனின் சமாதிக்கு சென்று அவர் உடலையும் பார்த்துவிடலாம் என்று நினைத்தால் திங்கட்கிழமை விடுமுறையாம்.அடுத்த நாள் தான் பார்க்கமுடியும்.காலை எழுந்து கிளம்பி நேராக மெக் டி சென்று பழைய ரசீதை காண்பித்து பர்கர் காபி வாங்கி சாப்பிட்டுவிட்டு மெட்ரோ பிடித்து மீண்டும் கிரெம்லின் சென்றுவிட்டேன்.இன்று திங்கட்கிழமை என்பதால் கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.சிறிது நேரம் பூங்காவிலும் செஞ்சதுக்கத்திலும் சுற்றி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு Armour chamber அனுமதிச்சீட்டு வாங்கும் நீண்ட வரிசையில் சேர்ந்து கொண்டேன்.கூட்டம் மெதுவாக நகர்ந்து அனுமதிச்சீட்டு வாங்க அரை மணிநேரம் ஆனது. Armour chamber இல் குழுவாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கின்றனர்.எனக்கு 2மணிக்கு தான் செல்ல அனுமதி கிடைத்தது, இப்போது மணி 12. இரண்டு மணி நேரம் இடைவெளி இருக்கிறது. அடுத்த மெட்ரோ ஸ்டேஷனில் கிறிஸ்து மீட்பர் பேராலயம்(Cathedral of Christ the Saviour) இருந்தது. அதை போய் ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று தோன்றியது. மெட்ரோ பிடித்து சென்றேன்.

மாஸ்கோவ் நதியை பார்த்து அமைந்திருக்கும் இந்த தேவாலயம் உலகிலேயே மிக உயரமான மரபு வழி திருச்சபை தேவாலயம் ஆகும்.மரபு வழி திருச்சபையினர் தம்மை யேசுவாலும் அவர் தேர்ந்தெடுத்த பனிரெண்டு திருத்தூதர்களாலும் அமைக்கப்பட்ட சபையின் தொடர்ச்சியாக கருதுகின்றனர்.இச்சபையின் ஆரம்பத்தில் இயற்றப்பட்ட சமயக் கோட்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்கப்படுவதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட இந்த தேவாலயம் முழுவதுமாக கட்டிமுடித்தது, உள்ளே ஓவியங்கள் வரைந்தது என நாற்பது ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.1931இல் கம்யூனிச தலைவர் ஸ்டாலினின் உத்தரவினால் இடித்து தரைமட்டமாக்கப் பட்டது. பின் ரஷ்ய மரபு வழி திருச்சபையினரின் முயற்சியால் 1990இல் மீண்டும் இந்த தேவாலயத்தை கட்டுவதற்கு  சோவியத் அரசு அனுமதி அழைத்தது. மக்களின் நன்கொடை மூலம் பழைய தேவாலயத்தை அப்படியே மாதிரியாகக் கொண்டு மீண்டும் கட்டப்பட்ட இந்த தேவாலயம் 2000 ஆவது ஆண்டில் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. பார்ப்பதற்கு இந்த தேவாலயம் தாஜ்மஹாலை நினைவூட்டியது.

ஏதோ காரணத்தால் அன்று யாரும் தேவாலயத்துக்குள் அனுமதிக்கப் படவில்லை. வெளியிலிருந்து சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் அருகிலேயே மாஸ்கோவ் நதியில் படகு பயணத்திற்கு அழைத்துக்கொண்டிருந்தார்கள். நான் Armour chamber செல்ல வேண்டும். மீண்டும் மெட்ரோ பிடித்து கிரெம்ளின் சென்றேன். இரண்டு மணிக்கு Armour chamberஇல் அனுமதித்தார்கள். “Armour Chamber”இல் ஜார் அரச குடும்பத்தினர் உபயோகப்படுத்திய போர்க்கருவிகள், நகைகள், கிரீடங்கள், பாத்திரங்கள், சாராட்டு வண்டிகள் அணிந்திருந்த உடைகள் எல்லாம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.அனைத்தையும் அவசரமாக பார்த்து முடிக்கவே இரண்டு மணி நேரம் ஆனது.ராஜ வாழ்க்கை தான்.பார்த்து முடித்தவுடன் மீண்டும் புனித மீட்பர் தேவாலயம் சென்றேன்.

DSCN1911

மாஸ்கோவ் நதியை கடந்து தேவாலயம் நோக்கி வரும் பாலத்தில் நின்ற படி தேவாலயத்தையும், மாஸ்கோவ் நதியையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.பின் மாஸ்கோவ் நதியில் படகுப் பயணம் செய்ய டிக்கெட் வாங்கி கொண்டேன்.தேவாலயம் இருந்த இடத்திலிருந்த முன்னும் பின்னுமாக ஒரு மணி நேரம் பயணம். குளிர் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.மணி ஆறரை ஆகிவிட்டது.மெட்ரோ பிடித்து அறை வந்து சேர்ந்தேன்.

ஹாஸ்டல் வரவேற்பறையில் வேறொரு அழகான ரஷ்யப்பெண் இருந்தாள். அவளிடம் சென்று எனது விசா ரெஜிஸ்டர் செய்யப்பட்டு விட்டதா? என்று கேட்டேன். அன்று தான் ரெஜிஸ்டர் செய்து தருவதாக முன்னாள் இருந்தவன் சொல்லி இருந்தான். தேடித் பார்த்து விட்டு இல்லை என்று கூறினாள். அடப்பாவிகளா. விசாவை ரெஜிஸ்டர் செய்ய 400ரூபிள்ஸோ 700ரூபிள்ஸோ இவர்கள் கொடுக்க வேண்டும்.நான்கு நாள் தானே தங்குகிறேன் என்று அதனை மிச்சம் பிடிக்க ரெஜிஸ்டர் செய்யாமல் இருந்திருக்கிறான் அந்த கோமட்டிப்பயல்.ரெஜிஸ்டர் செய்ய ஏழு நாட்களுக்கு குறைவாக தங்கினால் காசு வேண்டும் என்று வாங்கிக்கொள்ளலாம்.அதை விட்டுவிட்டு பகுமானமாய் இலவசமாய் செய்து தருகிறோம் என்று மின்னஞ்சல் அனுப்பி விட்டு இப்படி காலை வாரிவிட்டு விட்டான்.மறுநாளாவது ரெஜிஸ்டர் செய்து தர முடியுமா ?என்று கேட்டேன். அவள், நாளை யாரும் ரெஜிஸ்டர் செய்ய ஹாஸ்டெலில் இருந்து  செல்ல மாட்டார்கள். நாளை மறுநாள் வேணுமெனில் முயற்சி செய்கிறோம் என்று கூறினாள்.கோபம் கோபமாக வந்தது. அவள் மேல் எந்த தப்பும் இல்லை. அழகாக வேறு இருந்தாள். எல்லாம் அந்த கோமட்டிப்பயல். ”கவலைப்படாதீர்கள்.நீங்கள் இந்தியர் தானே?உங்களிடம் எல்லாம் யாரும் சோதனை செய்யமாட்டார்கள்” என்றாள்.

இணையத்தில் இது பற்றி தேடிப் பார்த்தேன். தெளிவான பதில் கிடைக்கவில்லை.சட்டப்படி நான் ரெஜிஸ்டர் செய்ய தேவை இல்லை தான். ஆனால் லஞ்சம் வாங்கியே தீர வேண்டும் என்று வரும் போலீஸிடம் மாட்டினால் காசு அழ வேண்டியது இருக்கும். வாதிடவும் எனக்கு ரஷ்யன் தெரியாது. அவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்காது. சரி, பார்த்துக்கொள்ளலாம். குளித்து விட்டு எனது மெட்ரோ ஸ்டேஷனின் அருகில் இருந்த நான்கு மெட்ரோ ஸ்டேஷன்களை சென்று பார்த்து விடலாம் என்று கிளம்பினேன்.

மாஸ்கோ மெட்ரோக்களில் சில சுற்றுலா தளமாக உள்ளன.ஸ்டேஷனின் உள்ளே உழைப்பாளர்களின் ஓவியங்களும் சிலைகளும் வண்ண விளக்குகளுமாக கட்டடத்தை வடிவமைத்துள்ளனர். என்னைப்போல் வேறு சிலரும் குழுவாக வந்து சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தனர். சீனர்கள். நான் மெட்ரோ ஸ்டேஷனில் ஓவியங்களை படம் பிடிப்பதை பார்த்துக் கொண்டிருந்த ரஷ்யர் ஒருவர் நேராக என்னை நோக்கி வந்து அங்கு இருந்த கதிர் அருவாள் சிலையை காட்டி அதையும் படம் பிடித்துக்கொள்ளும்படி ரஷ்யனில்  சொல்லிவிட்டு, வந்து நின்றிருந்த மெட்ரோ ரயிலில் ஏறிப்போய்விட்டார். சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் என் ஸ்டேஷனுக்கு வந்து ஹாஸ்டெலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.மணி ஒன்பதரை. சூரியன் மறைய ஆரம்பித்திருந்தது.ஊர் அடங்கவில்லை.இன்னும் மக்கள் சுற்றிக் கொண்டுதான் இருந்தார்கள். இளைஞர்களும், இளைஞிகளும் காலில் சக்கரத்தை மாட்டிக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். பின் வழக்கம்போல் பீரும்,பிரியாணியும் வாங்கிக்கொண்டு ஹாஸ்டல் வெளியே உட்கார்ந்து அடிக்க ஆரம்பித்துவிட்டேன். வெளியே உட்கார்ந்திருந்த போது ஒரு வெள்ளைக்காரி என்னிடம் வந்து பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்று சிகெரெட் லைட்டரை வாங்கிக்கொண்டு போய் சில நேரங்களில் திரும்ப கொண்டுவந்து கொடுத்துவிட்டாள்.முடித்துவிட்டு தூங்கச் சென்று விட்டேன்.

பின்னூட்டமொன்றை இடுக